நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் நிகில் குமாரசாமி, கர்நாடகா நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘தேர்தல் வாக்குறுதியில் இலவசங்களை அறிவிப்பதால் உண்மையான மக்களின் மனநிலை மாறக்கூடும்.
தேர்தல் விதிமுறைகளை மீறி இலவசங்களை அறிவித்து மக்களை கவர்ந்து இழுக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நடைமுறை கர்நாடகா மட்டுமன்றி, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன. அதனால், இதற்கு கடுமையாக நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு இட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (04-02-24) கர்நாடகா நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபங்களை பதிவுசெய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய சட்டத்துறை ஆகியவற்றுக்கு கர்நாடகா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தல் வரும்போதோ அல்லது நாடாளுமன்றத் தேர்தல் வரும் போதோ சில அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்களை அறிவிப்பது என்பது குறிப்பிடத்தக்கது.