ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது ஆலைக்குள் பொருட்கள் தொகுப்புப் பிரிவில் புதிதாக 100 ரோபோக்களை இணைத்துள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்கள் தொகுப்பதற்கு ரோபோட்களை பயன்படுத்துவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இணையதள வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் நிறுவனம். தனது பெங்களூரு டெலிவரி கிடங்கில் பொருட்களை வகை, எடை, எண்ணிக்கை என பிரித்து, கன்வேயர் பெல்ட்டில் இருந்து எடுத்து குறிப்பிட்ட பின்கோடுக்கு செல்லும் பெட்டிகளில் கொண்டு சேர்க்கும் பணியில் இந்த ரோபோக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 4,500 பார்சல்களை டெலிவரிக்கு தயாராக்க முடியும் என்றும், இது மனிதர்கள் செய்யும் வேலையை விட 10 மடங்கு அதிகம் என்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மூத்த தலைவர் கிருஷ்ண ராகவன் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதலாக ரோபோட்களை இணைத்து சேவையின் தரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஒரு மணிநேரத்தில் மனிதர்களால் 450 பார்சல்களை பேக் செய்ய முடியும். ஆனால் இப்போது இந்த ரோபோட்களின் உதவியுடன் ஒரு மணிநேரத்தில் 4,500 பார்சல்களை பேக் செய்ய முடிகிறது. இதனால் டெலிவரி வேகமும் அதிகரிக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.