
டெல்லியில் 26 வயதான ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண் கொலை செய்யப்பட்டு உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இதேபோல் கணவரையும், மாமியாரையும் கொலை செய்த பெண் ஒருவர் அவர்களது உடல்களை வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் அசாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் நுன்மதி காவல்நிலையத்தில் வந்தனா கலிதா (32) என்ற பெண் தனது மாமியார் சங்கரி டே மற்றும் அவரது கணவர் அமர்ஜோதி டே ஆகிய இருவரையும் காணவில்லை என புகாரளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், பலகட்ட விசாரணைகளை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த நவம்பர் 21 ஆம் தேதி அன்று காணாமல் போனதாக கூறப்பட்ட சங்கரி டேவின் வங்கி கணக்கில் இருந்த பணம் அவரது ஏடிஎம் கார்டு மூலம் எடுக்கப்பட்டதாக சங்கரி டேவின் மருமகன் தரப்பில் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்தும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த புகாரினை விசாரிக்க கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. முதலில் புகாரளித்த வந்தனா கலிதா, நிர்மால்யா டே ஆகிய இருவரிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதிர்ச்சி தரும் விதமாக மாமியார் சங்கரி டே மற்றும் கணவர் அமர்ஜோதி டேவை கொன்றதாக வந்தனா கலிதா ஒப்புக்கொண்டார். 2022 ஜூலை 26 ஆம் தேதி ஆண் நண்பர் அரூப் டேக்கா உதவியுடன் மாமியாரைக் கொன்று உடலை மூன்று துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்துவிட்டு ஜூலை 27 ஆம் தேதி மற்றொரு ஆண் நண்பரின் டாக்ஸி மூலம் உடல் பாகங்களை பல்வேறு இடங்களில் வீசியதாக ஒப்புக்கொண்டார். அதன்பின் ஆகஸ்ட் 17 ஆம் தேதி கணவர் அமர்ஜோதியையும் வெட்டி 5 பாகங்களாக பிரிட்ஜில் வைத்து பின்னர் அடுத்த நாள் மாமியாரின் உடலை வீசியதைப் போல் பல்வேறு இடத்தில் உடல் பாகங்களை வீசியது தெரியவந்தது. கொலைக்கான காரணம் குறித்து வந்தனா கலிதா மற்றும் அவரது ஆண் நண்பர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.