டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை கர்நாடகா மாநில முதலமைச்சர் எடியூரப்பா அடுத்தடுத்து சந்தித்த நிலையில் எடியூரப்பா கர்நாடகா மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார்.
தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிகளவு வளர்ச்சி அடையாமல் இருந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க.வை ஆட்சி கட்டிலில் அமர்த்தியவர் எடியூரப்பா. அவரது தலைமையில் தற்போது கர்நாடகாவில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எடியூரப்பாவின் மகன்கள் ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக டெல்லி தலைமைக்கு புகார்கள் பறந்தன.
மேலும், எடியூரப்பாவின் வயது மற்றும் உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கர்நாடகா மாநிலத்திற்கு புதிய முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இச்சூழலில் டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்தார்.
பா.ஜ.க.வின் கொள்கைப்படி, மூத்த தலைவர்கள் அரசுப் பதவிகளை ராஜினாமா செய்து, வேறு பொறுப்புகளுக்கு செல்கிறார்கள். அதன்படி, 79 வயதான எடியூரப்பாவும் விரைவில் முதலமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
எடியூரப்பா விலகல் மற்றும் புதிய முதலமைச்சர் நியமனம் ஆகியவை விஷயங்கள் திட்டமிட்டு கச்சிதமாக நடைபெற வேண்டும்என்று கட்சித் தலைமை விரும்புகிறது. எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு பதிலாக தனது மகன்களுக்கு ஆட்சியிலும், கட்சியிலும் முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் கர்நாடகா முதலமைச்சருக்கு நெருக்கமான ஆதரவாளராக கருதப்படும் சோபா மத்திய அமைச்சராக பதவியேற்றார். அதே சமயத்தில், மத்திய அமைச்சராக இருந்த கர்நாடகாவைச் சேர்ந்த சதானந்த கவுடா ராஜினாமா செய்துள்ளார். இதனால் கர்நாடகா மாநில அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படும் சென்று பா.ஜ.க.வின் தலைவர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் வரும் ஜூலை 26- ஆம் தேதி அன்று முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, மாநில அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம், கர்நாடகாவின் அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் கூறுகின்றன.