ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம், திருப்பதியில் உள்ள திருமலை பெருமாள் கோயில் உலக பிரசித்தி பெற்றது. தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் திருமலை சென்று பெருமாளை தரிசனம் செய்வார்கள். 1950 க்கு முன்பு வரை மெட்ராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த திருப்பதி பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அது ஆந்திரா வசமானது.
ஆந்திராவின் கட்டுப்பாட்டில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு என பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளது ஆந்திரா அரசாங்கம். அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தான கமிட்டிக்கு உறுப்பினர்கள் நியமனம் செய்யும்போது, மேற்கண்ட மாநிலங்களின் சிபாரிசுப்படி உறுப்பினர்களை நியமனம் செய்யும். திருமலையில் ஏதாவது பணிகள் செய்யும்போது, அந்த உறுப்பினர்கள் மூலமாக அந்தந்த மாநில அரசுகளின் கருத்துக்களை தேவஸ்தான போர்டு கேட்டு செயல்படும்.
திருப்பதி வரும் பக்தர்களில் 30 சதவிதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், 20 சதவிதம் பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள், 40 சதவிதம் பேர் ஆந்திரா – தெலுங்கானாவை சேர்ந்தவர்கள். மீதி 10 சதவிதம் பேரே மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள். கோயிலுக்கு வருபவர்களின் வருமானம் 90 சதவிதம் ஆந்திரா மக்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. பக்தர்களுக்கு பலவித வசதிகள் திருப்பதி திருமலையில் செய்திருந்தாலும், அங்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை ஆந்திரா மக்களுக்கு மட்டும்மே. இதனால் மற்ற மாநில பக்தர்கள் தங்க இடம் கிடைக்காமல் அதிகம் சிரமப்பட்டனர்.
இதனை கவனத்தில் கொண்டு கர்நாடகா அரசாங்கம், தங்களது மாநில பக்தர்கள் தங்க தனியாக பக்தர்கள் ஓய்வு அறைகள் கட்ட இடம் கேட்டது. திருமலை முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீண்ட இழுபறிக்கு பின் தேவஸ்தானம் 2008ல் 7.05 ஏக்கர் நிலத்தை 50 வருட குத்தகைக்கு கர்நாடகா அரசுக்கு வழங்குவதாக அறிவித்தது திருமலை திருப்பதி தேவஸ்தானம். அந்த இடம் பின்னர் முறையாக பத்திரபதிவும் செய்து தரப்பட்டது.
அந்த இடத்தில் கர்நாடகாவில் இருந்து செல்லும் பக்தர்கள் தங்குவதற்கான கட்டிடம் கட்டுவதற்கான ஆலோசனை கூட்டம் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தலைமையில் ஜூலை 4ந்தேதி பெங்களுரூவில் நடைபெற்றது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, செயல்அலுவலர் அனில்குமார், கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி போன்றோர் நேரடியாக சென்று கலந்துக்கொண்டனர்.
ஏழுமலையான் கோயில் சுற்றியுள்ள மாடவீதியில் மேற்கு பகுதியில் கர்நாடகாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 1.94 ஏக்கர் இடத்தை மட்டும் காலியாக விட்டுவிட்டு மீதியிடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவஸ்தானம் ஒப்புதல் தந்தது. கட்டிடம் கட்டுதவற்கான முறையான பணி இரண்டு மாநில முதல்வர்களும் விரைவில் செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு கர்நாடகாவில் இருந்து செல்லும் பக்தர்கள் குறைவு. அப்படியிருக்க அந்த மாநில அரசு தன் மாநில மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து, தனியாக பக்தர்கள் ஓய்வு விடுதியை அமைக்க இடம் வாங்கி, கட்டிடம் கட்டுகிறது. அதே திருப்பதிக்கு தமிழகத்தில் இருந்து அதிக பக்தர்கள் செல்கிறார்கள். தங்க இடம் கேட்கும்போது அவர்களும் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், பாதுகாவலர்களால் பல அவமானத்துக்கு ஆளாகிறார்கள். இதுப்பற்றி தமிழக அரசுக்கு பலமுறை புகார் சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
திருமலை ஏழுமலையான் கோயில் உருவாக காரணமாக இருந்தவர் தமிழகத்தில் பிறந்த ராமானுஜர் என்பது குறிப்பிடத்தக்கது.