டெல்லி வன்முறை தொடர்பாக விசாரித்து வந்த நீதிபதி முரளிதர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு கலவரங்கள் வெடித்தன. வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த கலவரங்களில் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பாஜகவின் கபில் மிஸ்ரா உட்பட மூன்று பாஜக முக்கிய தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய நேற்று உத்தரவிட்டார் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர். இந்நிலையில் நீதிபதி முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று மதியம் முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிட்ட நிலையில், ஏற்று இரவு அவரது பணியிடம் மாற்றப்படுவது தொடர்பான உத்தரவு வெளியாகியுள்ளது. முரளிதர் உள்ளிட்ட மூன்று நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு கடந்த 12-ம் தேதி பரிந்துரை செய்த நிலையில், தற்போது முரளிதர் மட்டும் இதில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.