குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம், குடியரசுத்தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்று (09/06/2022) மதியம் 03.00 மணிக்கு வெளியிடப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று (09/06/2022) மதியம் 03.00 மணியளவில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்து, குடியரசுத்தலைவர் பதவிக்கான தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.