நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் ரபேல் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக மாறி வருகிறது. நேற்று மாநிலங்களவையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை சமர்பிக்கப்பட்ட நிலையில் அதில், முந்தைய காங்கிரஸ் அரசு செய்த ஒப்பந்தத்தை விட 2.86 சதவீதம் குறைவான விலைக்குத்தான் பாஜக ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இப்படி இருக்கும் போது பிரான்சில் இருந்து 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. வருகிற பிப்ரவரி 20ந்தேதி இந்திய விமான கண்காட்சி பெங்களுருவில் நடைபெற உள்ளது. இதில் பங்குபெறுவதற்காக இந்த விமானங்கள் இந்தியா கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இரு விமானங்கள் பறக்கும் பயிற்சிக்காகவும், மூன்றாவது விமானம் காட்சிக்கு வைக்கவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.