உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த தலைவருமான கபில் சிபல் இன்று (26-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் குடமுழுக்கு விழா குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “பா.ஜ.க.வினர் ராமரைப் பற்றி பேசி வருகின்றனர். ஆனால், அவர்களுடைய கொள்கைகளும், செயல்பாடுகளும் ராமரின் கொள்கைகளுக்கு நேர் எதிரானவை. அவர்களின் நடத்தைகள் ராமரின் அருகில் கூட வரமுடியாது.
உண்மை, தியாகம், மரியாதை, சகிப்புத்தன்மை ஆகியவை ராமரின் குணநலன்களாகும். இவற்றுக்கு நேர் எதிரான குணநலன்களைக் கொண்டவர்கள்தான் பா.ஜ.க.வினர். அவர்கள்தான் ராமருக்கு கோவில் கட்டுவதாகவும், ராமரை பெருமைப்படுத்துவதாகவும் கூறிக் கொள்கிறார்கள். நமது இதயங்களில் ராமர் இருக்க வேண்டும். அதுபோல், எனது இதயத்தில் ராமர் இருக்கிறார். அதனை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.” என்று கூறினார்.