உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ இந்திர பிரதாப் திவாரி. இவர் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து வகுப்பில் சேர்ந்ததாக சாகேத் பட்டக் கல்லூரியின் முதல்வர் புகாரளித்தார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
இந்த முதல் தகவல் அறிக்கையில், பட்டப்படிப்பின் இரண்டாவது ஆண்டில் தோல்வியடைந்த இந்திர பிரதாப் திவாரி, போலி மதிப்பெண் சான்றிதழை அளித்து மூன்றாவது ஆண்டு வகுப்பில் சேர்ந்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர், 13 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்தப் போலி மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்பட்ட வழக்கை விசாரித்த வந்த எம்.பி / எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், இந்திர பிரதாப் திவாரி குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. மேலும், இந்திர பிரதாப் திவாரிக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.