கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் 60% பரப்பளவு கன்னடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து கடைகளின் பெயர்ப் பலகைகளும் ஆய்வு செய்யப்படும். எந்தெந்த கடைகளின் பெயர்ப் பலகைகளில் 60% கன்னடம் இல்லையோ, அந்த கடைகளுக்கு அறிவிக்கை வழங்கப்படும்.
மேலும் கடைகள் தங்களின் பெயர்ப் பலகைகள் 60% அளவுக்கு கன்னடத்தில் எழுதப்பட்டிருப்பதைப் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் உறுதி செய்து சம்பந்தப்பட்ட மண்டல ஆணையர்களிடம் கடிதம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறிய கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்திருந்ததது.
இந்நிலையில் அனைத்து வணிக வளாகங்களிலும், கன்னடத்தில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்தி கன்னட ரக்ஷண வேதிகா என்ற அமைப்பினர் பெங்களூரு எம்.ஜி.ரோடு, லால்லி ரோடு, விமான நிலைய சாலை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர். அப்போது கன்னடத்தில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். கன்னடத்தில் பெயர்ப் பலகை வைக்காத வணிக வளாகங்களின் முன் உள்ள பெயர்ப் பலகைகள், அறிவிப்பு விளம்பர பதாகைகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூருவில் உள்ள பிரபல வணிக வளாகங்கள் (மால்கள்) மூடப்பட்டன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.