பிரதமர் மோடி, அரசு முறைப் பயணமாக ஜூன் 20 முதல் 25 ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் முதல் கட்டமாக ஜூன் 20 ஆம் தேதி அன்று அமெரிக்கா சென்ற மோடி அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டவர்களை சந்தித்து இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தினார்.
அதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா வளர்ச்சி குறித்து பல்வேறு விசயங்களைப் பேசினார். மேலும் இந்த பயணத்தின் போது பலதரப்பட்ட ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இது குறித்து பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் பிரதமர் மோடியை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள பாஜக கட்சியின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். மேலும், அந்த புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்த ஜே.பி. நட்டா மோடியின் அமெரிக்கா பயணத்தைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினரை கடுமையாகச் சாடி விமர்சித்துப் பேசினார்.
அதில் பேசியதாவது, “குடும்ப அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியலை பாஜக கட்சி முழுவதுமாக அழித்துவிட்டது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் குடும்பங்களின் கட்சிகளாக மாறிவிட்டது. ஆனால், பாஜகவினருக்கு கட்சி தான் குடும்பமாக இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்திய பிரதமர்கள் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அங்கு பயங்கரவாதம் குறித்து மட்டும் விவாதிக்கப்படும். அதை அப்பொழுதே மறந்தும் விடுவார்கள். ஆனால், பிரதமர் மோடி தனது அமெரிக்கா பயணத்தின் போது விண்வெளித்துறை, அந்நிய நேரடி முதலீடு மற்றும் தொழில்நுட்பம் உள்பட அனைத்து ஒப்பந்தங்களிலும் கையெழுத்து ஆகி இருக்கின்றன.
மேலும், தற்போது இந்தியா குறித்துப் பேசும்போது யாரும் பாகிஸ்தானை பற்றி குறிப்பிடுவதில்லை. இதன் மூலம் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாட்டைப் பாதுகாப்பாக அமைத்திருக்கும் திறமையை நாம் அடைந்திருக்கிறோம். உலகம் முழுவதும் மோடியின் திறமையைப் பாராட்டுவதைக் கண்டு காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது. எனவே தான் அவர்கள் மோடியை தாழ்மைப்படுத்தும் விதமாகப் பேசி வருகிறார்கள்.
ராஜஸ்தானை ஆளும் கெலாட் அரசின் கீழ் ஊழல், கழுத்தை நெறிக்கும் அளவிற்கு மிகவும் அதிகமாக உள்ளது. ஊழல் செய்வதற்காகவே காங்கிரஸ் கட்சி தங்களது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வெளிப்படையாக அனுமதி கொடுத்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் ஊழல் பரவி இருக்கிறது” எனக் கூறினார்.
மேலும் , இந்த புதிய அலுவலகத்தின் திறப்பு விழாவின் போது முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட பாஜக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.