பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென பல காலமாக அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அங்கு இருக்கும் குகி இன மக்கள் மெய்டீஸ் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த மாநிலத்தில் மெய்டீஸ் இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரமானது கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் இன்று வரை நீடித்து வருகிறது.
இதனையடுத்து இந்த கலவரத்தில் ஏராளமான வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டு 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இதனால், மணிப்பூர் மாநிலத்தில் ஏராளமான காவல்துறையினரும் ராணுவத்தினரும் கலவரத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில், ராணுவத்தினர் வைத்திருந்த 2 ஆயுதக் கிடங்குகள் ஏற்கனவே போராட்டக்காரர்களால் கொள்ளை அடிக்கப்பட்டன. அதில் இருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை கிளர்ச்சியாளர்கள் கொள்ளை அடித்து சென்றுவிட்டனர்.
அதன் பின்பு கலவரத்தை அடக்க மணிப்பூர் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையின் போது ராணுவத்தினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருள்களை தாமாக முன்வந்து கலவரக்காரர்கள் ஒப்படைக்கும்படி எச்சரித்திருந்தார். அந்த எச்சரிக்கையை தொடர்ந்து பலர் தங்களிடம் இருந்த பல ஆயுதங்களை ஒப்படைத்தனர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் தவுபால் மாவட்டத்தில் உள்ள காவல் ஆயுதக் கிடங்குகளை கிளர்ச்சியாளர்கள் கொள்ளை அடித்துள்ளனர். இந்த இடம் இம்பாலில் இருந்து 24 கி.மீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிளர்ச்சியாளர்கள் ஆயுதக் கிடங்குகளை கொள்ளை அடிக்க முற்படும் போது அவர்களை கலவர தடுப்பு காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும், ஆயுதங்களை கொள்ளையடித்து விட்டு அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். கிளர்ச்சியாளர்களை தடுக்க முயன்ற மோதலில், கிளர்ச்சியாளர்கள் தரப்பில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், பாதுகாப்பு வீரர் ஒருவர் துப்பாக்கி குண்டினால் காயமடைந்தார்.