ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40 கோடியாக உயர்ந்ததையடுத்து, ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகும். அதிரடி சலுகை அறிவிப்பு, குறைவான விலையில் இணைய சேவைகள் எனத் தொடர்ச்சியான அறிவிப்புகளால், குறுகிய காலத்திலேயே இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் தனக்கான இடத்தை ஜியோ பிடித்துக்கொண்டது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் நேற்று வெளியிட்ட தகவலின்படி ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் ஜியோ நிறுவனத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மற்றொரு முன்னணி நிறுவனமான பாரதி ஏர்டல் நிறுவனத்தில் 32 லட்சத்து 60 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர்.
இந்தியாவில் மொபைல் சேவையைப் பயன்படுத்துவோரின் மொத்த எண்னிக்கை 114.4 கோடி ஆகும். இதில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை முறையே 61.9 கோடி, 52.1 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.