ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11- வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள மோஹ்ராபதி மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், அம்மாநில முதல்வராக இரண்டாவது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர் ஹேமந்த் சோரனின் தந்தையும், முன்னாள் முதல்வருமான சிபு சோரன் பங்கேற்றார்.
அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு எம்.பி, கனிமொழி எம்.பி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதற்கு முன்பு 2013 ஜூலை முதல் 2014 டிசம்பர் 28 ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார் ஹேமந்த் சோரன் என்பது குறிப்பிடத்தக்கது.