சமீபத்தில் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். இதில், பீகார் மாநிலம், சீதாமர்ஹி மக்களவைத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளர் அர்ஜுன் ராயை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் தேவேஷ் சந்திர தாக்கூர் வெற்றி பெற்றி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இஸ்லாமியர் மற்றும் யாதவ் சமூகத்தினர் தனக்கு வாக்களிக்காததால் அவர்களின் கோரிக்கைகளை ஏற்கமாட்டேன் என்று எம்.பி தேவேஷ் சந்திர தாக்கூர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேவேஷ் சந்திர தாக்கூர் பேசிய வீடியோவில், “முஸ்லீம் மற்றும் யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வர விரும்புவோர், வரலாம். தேநீர், சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம். ஆனால் எந்த உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஏதோ வேலைக்காக என்னிடம் வந்தார். அவர் முதல் தடவை வந்திருக்கிறார்னு நான் தெளிவா சொல்லிட்டேன். அதனால் அதைப் பற்றி அதிகம் சொல்லவில்லை. நீங்கள் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு வாக்களித்தீர்களா? என்று அவரிடம் கேட்டேன். அவரும் அதை ஒப்புக்கொண்டார். டீ சாப்பிட்டு விட்டு போக சொன்னேன். உங்களுக்கான வேலையை நான் செய்ய மாட்டேன்” என்று பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மிருத்யுஞ்சய் திவாரி கூறுகையில், “எம்.பி., எம்.எல்.ஏ., அல்லது பிரதமராக இருந்தாலும், எந்தத் தலைவரும், எந்த ஜாதியையும், சமூகத்தையும் சேர்ந்தவர் இல்லை. தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் ஒரு பகுதியின் பிரதிநிதியாகிறார். தேவேஷ் சந்திர தாக்கூர் இப்போது சீதாமர்ஹியின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு அந்தப் பகுதியில் உள்ள அனைவரும் சமமாக இருக்க வேண்டும். ஜாதி, சமூகம் என பாகுபாடின்றி அனைவருக்கும் பணி செய்ய வேண்டும். பாஜகவுடன் தனது கட்சி கூட்டணியில் இருந்தாலும் அவர் காவி நிறத்தில் இருக்கக் கூடாது” என்று கூறினார்.