கடந்த வாரம் ஹைதரபாத்தில் 25 வயதுடைய கால்நடை மருத்துவர் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் பலரும் இந்த பிரச்சனை குறித்து பேசினர்.
அப்போது சமாஜ்வாதி கட்சியின் பெண் எம்பியான ஜெயா பச்சன் பேசுகையில், “நிர்பயா தொடங்கி எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டன. ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர் கதையாகி வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது. ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களை பொது இடத்திற்கு கொண்டுவந்து மக்களால் அடித்துக் கொல்ல வேண்டும்” என்று ஆவேசமாக பேசினார்.