தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. இந்தப் பருவமழையால் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் அதிகமாக தேங்கியது. தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகளும் நிரம்பி ஓடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தரைப்பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 4 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அந்தமானில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறிய நிலையில் இது தாழ்வு மண்டலமான பின்னர் 24 மணிநேரத்தில் 'ஜாவத்' புயலாக மாறும் என நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ஜாவத்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் நாளை காலை வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை அருகே சென்றடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.