வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒருவருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நவம்பர் 19ஆம் தேதி அறிவித்தார்.
அதன்தொடர்ச்சியாக இன்று (29.11.2021) நாடாளுமன்ற மக்களவையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, ‘குறைந்தபட்ச ஆதார விலை, எங்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெறுவது, மின்சார சட்டத் திருத்த மசோதா, காற்று தர மேலாண்மை ஆணைய அவசரச் சட்டம் ஆகியவற்றைத் திரும்பப் பெறுவது, இறந்த எங்களின் நண்பர்களுக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குவது ஆகிய பிரச்சனைகள் தீர்க்கப்படும்வரை போராட்டம் தொடரும்’ என அறிவித்த விவசாயிகள், அதன்படியே போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர்.
இந்தநிலையில், மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகைத், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், "இந்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டத்தை கொண்டுவர வேண்டும். இல்லையெனில் ஜனவரி 26 (குடியரசு தினம்) வெகுதொலைவில் இல்லை. 4 லட்சம் ட்ராக்டர்களும், விவசாயிகளும் தயாராக உள்ளனர்" என கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று, விவசாயிகள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் ட்ராக்டர் பேரணி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.