Skip to main content

“பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது கட்சியின் முடிவல்ல” - ஜனதா தளம் கட்சி மாநிலத் தலைவர்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Janata Dal Party state president says Alliance with BJP is not decision by the party

 

இந்தியா முழுவதும் நடைபெறும் 2023 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் என 25க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளனர். மேலும், இந்தக் கூட்டணிக்கு ‘இ.ந்.தி.யா.’ என்று பெயரை வைத்து பீகார், பெங்களூர் மற்றும் மும்பை போன்ற மாநிலங்களில் அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறார்கள். அதேபோல், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளனர். அந்த வகையில் கர்நாடகா மாநிலத்திலும் பா.ஜ.க தங்களது கூட்டணிக் கட்சியை உறுதி செய்தது மட்டுமல்லாமல் தொகுதிப் பங்கீடு குறித்தும் முடிவு எடுத்துள்ளனர்.

 

கர்நாடகா மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.  காங்கிரஸின் இந்த வெற்றி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ.கவுடன் இணையப் போவதாக அடிக்கடி தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால், குமாரசாமியும், ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரான தேவகவுடாவும் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் என ஜனதா தள கட்சியின் தலைவர் தேவகவுடா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மற்றும் ஜனதா தள கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளன. கூட்டணி குறித்து விவாதிக்க முன்னாள் பிரதமர் தேவகவுடா செப்டம்பர் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.  ஜனதா தள கட்சிக்கு 4 நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி மற்ற 24 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடும்” என்று கூட்டணியை உறுதி செய்தனர். இந்த நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது என்பது கட்சியின் முடிவல்ல என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இப்ராஹிம், “பா.ஜ.க.வுடன் ஜனதா தளம் கூட்டணி வைப்பது என்பது கட்சியின் முடிவல்ல. குமாரசாமியின் தனிப்பட்ட முடிவு. உடல்நிலை சரியில்லாத அவரது தந்தை தேவுகவுடாவை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்குமாறு குமாரசாமி கட்டாயப்படுத்தியுள்ளார். நான்தான் ஜனதா தளம் கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவர். பா.ஜ.க.வைத் தவிர யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நாங்கள் தான் முடிவு செய்வோம்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்