காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் 9 எதிர்க்கட்சி தலைவர்கள் கொண்ட குழு இன்று ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு பயணம்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கி, அதற்கான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வெளியிட்டது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. அதேபோல் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவுக்கு, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் காஷ்மீர் மாநில தொடர்பான அனைத்து மசோதாக்களையும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து மத்திய அரசு நிறைவேற்றியது. மேலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததால், மத்திய அரசிதழில் அறிவிப்பாணையை வெளியிட்டு, காஷ்மீர் தொடர்பான அனைத்து மசோதாக்களையும் சட்டமாக்கியது. இந்த சட்டம் எப்போது அமலாகும் என்பது தொடர்பான தேதியையும் மத்திய அரசு அறிவித்தது.
ஜம்மு- காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்புக்கு முன், அந்த மாநிலத்தில் சுமார் 50,000- க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்களை குவித்து, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது மத்திய அரசு. அதேபோல் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு, இணையதள சேவை முடக்கம், சமூக வலைத்தளங்கள் முடக்கம், தொலைத்தொடர்பு சேவை முடக்கம், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதனை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்பும், பின்பும் காஷ்மீர் மாநில தலைவர்கள், முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். அதன் பிறகு கைது செய்யப்பட்டனர், தற்போது வரை தலைவர்களை ஜம்மு- காஷ்மீர் அரசு விடுதலை செய்யவில்லை.
காஷ்மீர் மாநில நிலவரத்தை அறிய சென்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நிலைமை சீரடைந்து வருகிறது. அதன் காரணமாக பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றனர்.
இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கொண்ட குழு இன்று ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்கிறது. இந்த பயணத்தில் 9 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத், கே.சி. வேணு கோபால், ஆனந்த் சர்மா, திமுக சார்பில் திருச்சி சிவா, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, ஜனதா தளம் கட்சி சார்பில் சரத் யாதவ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் காஷ்மீர் மாநிலத்திற்கு செல்லவுள்ளனர்.
அப்போது ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் சூழல் குறித்து இந்த குழு ஆய்வு செய்கிறது. மேலும் அந்த மாநில மக்களை சந்தித்து பேசவும் எதிர்க்கட்சிகள் குழு முடிவு செய்தது. அதன் பிறகு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து ஆலோசனை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் வரவேண்டாம் என ஜம்மு-காஷ்மீர் அரசு வலியுறுத்தியுள்ளது.