காஷ்மீரில் சிறுவர்கள், சிறுமிகள் உள்ளிட்டோரும் சிறைப்படுத்தப் பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அங்கு என்ன நடக்கிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வெங்கடேஷ் நாயக் என்பவர் கேட்டிருந்தார்.
தகவல் தொடர்புகள் மற்றும் இணையதளச் சேவைகளைத் துண்டித்தது, ரேடியோ, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்புகளை தடைசெய்தது, சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றியது, அரசியல் கட்சித் தலைவர்களையும், மற்றவர்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தது குறித்த விவரங்களை வெங்கடேஷ் கேட்டிருந்தார். ஆனால், இவை குறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்றும், கைது செய்யப்பட்டவர்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்துக்கு மட்டுமே தெரியும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த விண்ணப்பம், ஜம்மு காஷ்மீர் அரசுக்கு அனுப்பப்படவில்லை. அதாவது, 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் கூறினார்கள். அதன்படி, ஜம்மு காஷ்மீர் மாநில குடிமகன்கள் மட்டுமே தகவல் கேட்டு விண்ணப்பிக்க முடியும்.
அதுவும் இப்போதைக்கு வாய்ப்பில்லை. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பதால், அக்டோபர் 31 ஆம் தேதி முதல்தான் மத்திய அரசின் திருத்தச்சட்டம் அமலுக்கு வருகிறது. அதன் பிறகு தான் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் அமலுக்கு வரும்.
2018 ஆம் ஆண்டு, டிசம்பர் 19 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் இல்லையென்று எப்படிக் கூறலாம் என்றும் வெங்கடேஷ் நாயக் கேட்டிருந்தார்.
மாநில நிர்வாகம் குறித்த அனைத்து அதிகாரங்களும் குடியரசுத்தலைவருக்கு மாற்றப்பட்டுவிட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படிதான் நடக்கிறது என்று ஞாயிறன்று வெங்கடேஷ் கூறினார். எந்த வகையில் பார்த்தாலும் ஜம்மு காஷ்மீரில் அமலாகும் அனைத்து தடைகள் குறித்த உத்தரவுகளும் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கும். ஆனால், தங்களிடம் தகவல் இல்லை என்று கூறுவது உண்மை இல்லை.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அங்கு மக்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பிறகு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெங்கடேஷ் நாயக் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். கைது செய்யப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள், அமைப்புகளின் தலைவர்கள், அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள், அவற்றின் முகவரி, அவர்கள் எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரம் ஆகியவற்றை கேட்டிருந்தார். காஷ்மீர் தொடர்பான எந்தத் தகவல்களையும் கொடுக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.