எல்லைப்பகுதிக்கு ஆயுதங்களின்றி வீரர்களை அனுப்பியது ஏன் எனக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்த சூழலில், இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் திங்கட்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இரு நாட்டு உறவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த மோதல் குறித்து கேள்வியெழுப்பிய ராகுல் காந்தி, “இந்திய ராணுவ வீரர்கள் லடாக் எல்லைக்கு செல்லும்போது ஏன் ஆயுதங்கள் இன்றி அனுப்பப்பட்டார்கள்? நிராயுதபாணியாகச் சென்ற இந்திய ராணுவ வீரர்களைக் கொல்வதற்கு சீன ராணுவத்துக்கு எவ்வாறு துணிச்சல் வந்தது? இதற்கு யார் பொறுப்பு? இந்திய வீரர்களைக் கொன்றதன் மூலம், சீனா மிகப்பெரிய தவறிழைத்து விட்டது" எனத் தெரிவித்திருந்தார்.
ராகுலின் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலின்போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. ஆனால், 1996, 2005 இந்திய-சீன ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற வெடிமருந்து கொண்ட ஆயுதங்களை பயன்படுத்தவில்லை" என தெரிவித்துள்ளார்.