பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பில் மாநில அரசு அக்கறை காட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு திரும்பினார் மோடி.
இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மத்திய உள்துறை இது குறித்த விசாரணையைத் துவக்கியிருக்கிறது. அதேசமயம், பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடிகள் இருந்ததா என்பதை விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.
இந்த நிலையில், பிரதமரின் பயணத்தில் திட்டமிட்டே பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்தியதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை குற்றம் சாட்டுகிறது தமிழக பாஜக. இதனையடுத்து, பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து சென்னையில் பட்டினப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று காலை 10 மணிக்கு நடத்துகிறது.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணை தலைவரகள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, சென்னை மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், மாநில மீனவர் அணித் தலைவர் சதீஷ்குமார் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து நடக்கும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில், தமிழக பாஜக தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை வரை அமைதிப் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.