ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானில் பிரதமர் மோடி, அசோக் கெலாட் ஆட்சியையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதன்படி, சில தினங்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பா.ஜ.க சார்பில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து, நேற்று (02-10-23) இரண்டாவது முறையாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்த பிரதமர் மோடி, சித்தோர்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “இந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி ராஜஸ்தான் மாநிலத்தைச் சீரழித்து விட்டது. குற்றங்களில் எண்ணிக்கை பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடமாக இருப்பது எனக்கு மிகுந்த வலியைத் தருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலானவை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தான் வருகிறது. இதற்காகவா நீங்கள் காங்கிரஸுக்கு வாக்களித்தீர்கள்” என்று பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசமாட்டார். அதே போல், உஜ்ஜைனி குறித்தும் பேசமாட்டார். மல்யுத்த வீராங்கனைக்கு எதிரான தனது கட்சி எம்.பி.யின் அட்டூழியங்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கமாட்டார். தேசிய சாம்பியன்களுக்கு எதிரான டெல்லி போலீஸாரின் கொடுமையான நடத்தையை கண்டிக்க மாட்டார். ஆனால், தேர்தல் பிரச்சாரம் என்று வரும் போது மட்டும் வெட்கமே இல்லாமல் சிறப்பாக பொய் கூறுவார். காந்தி ஜெயந்தி நாளிலாவது பிரதமர் மோடி தனது பொய் மற்றும் அவதூறு அரசியலில் இருந்து நாட்டை காப்பாற்றுவார் என்று நாங்கள் நினைத்தோம்” என்று பதிவிட்டுள்ளார்.