தெலங்கானாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் கொலை விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பெரும் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்படும் எனவும், அதன்படி பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கப்படும் எனவும் அண்மையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். அதன்படி தயார்செய்யப்பட்ட சட்டத்திற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திர அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திர பிரதேச குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி மேற்கொள்ளப்பட உள்ள திருத்தங்களின்படி, குற்றத்துக்கான ஆதாரங்கள் இருந்தால் 7 நாட்களில் காவல்துறை விசாரணையை முடித்து, அடுத்த 14 நாட்களில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க இந்த மசோதா வழி செய்கிறது. இதன் மூலம் 21 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு, குற்றவாளிகள் தூக்கிலிடப்பட இந்த மசோதா வழிவகை செய்கிறது.
இதற்காக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவு நீதிமன்றம் அமைக் கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.