விசாகப்பட்டினம் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாயுடுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடப்புரத்தில் இயங்கி வரும் எல்.ஜி.பாலிமர்ஸ் (LG Polymers industry) இரசாயன ஆலையில் இன்று (07/05/2020) அதிகாலை ஏற்பட்ட விஷவாயுக்கசிவால், அப்பகுதியில் சுமார் 5 கி.மீ தொலைவுக்கு விஷ வாயு பரவியது. இந்த விஷவாயுக் கசிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13- ஆக உயர்ந்துள்ளது.
இந்தச் சம்பவதில் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்குச் சென்று நேரடியாகச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த விஷவாயுக் கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.