ஹரியானா மாநிலம் சூரஜ்கண்டில் கடந்த 2 நாட்களாக உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர்கள், உள்துறை செயலாளர்கள் போன்றோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் காவல்துறை சார்ந்த முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. மேலும் கடலோரப் பாதுகாப்பு, போதைப் பொருள் கடத்தலை முறியடிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் காணொளி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “சட்டம் ஒழுங்கு என்பது மாநிலங்களின் பொறுப்பு என்றாலும் கூட அது நாட்டின் ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தவும் பல்வேறு மாநில காவல்துறைக்கு இடையேயான தொடர்பை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து காவல்துறைக்கு ஒரே சீருடையை உருவாக்க வேண்டும்.
துப்பாக்கி வடிவில் இருந்தாலும் எழுத்து வடிவில் இருந்தாலும் நாம் பயங்கரவாதத்தினை முறியடிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது நாட்டின் எல்லையோர கிராமங்களுக்குச் சென்று அமைச்சர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் அங்குள்ள அனுபவங்களைப் பெற வேண்டும். பொய் செய்திகள் அதிகமாகப் பரவுகிறது. சிறிய போலி செய்திகளும் நாடு முழுவதும் பிரச்சனைகளைக் கிளப்பி விடும். சமூக வலைதளங்களில் எதையும் பகிரும் முன்பு அதன் உண்மையை உறுதி செய்த பின்பே பகிர வேண்டும். மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.