இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் கள நிலவரம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் கொண்ட குழு நேற்று மணிப்பூருக்கு நேரில் சென்று இரு குழுக்களாக ஆய்வு செய்து வருகிறது.
21 எம்.பி.க்கள் கொண்ட இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். கடந்த 4 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். இரு சமூகங்களை சேர்ந்த மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.
மணிப்பூர் மக்களை சந்தித்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி கனிமொழி பேசுகையில், ''அங்கு இன்னும் அமைதி திரும்பவில்லை என்பது தான் உண்மை. நேற்று நாங்கள் அங்கு சென்று முகாமில் இருக்கக்கூடிய மக்களைச் சந்தித்து வரக்கூடிய நேரத்தில் கூட அங்கு சாலையில் பெண்கள் தர்ணா செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் அங்கு ஒரு துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலை அங்கு இருக்கிறது. இதனால் அங்கு அமைதி திரும்பாத சூழ்நிலையே தொடர்கிறது. முகாம்களில் இருக்கக்கூடியவர்கள் மீண்டும் அவர்களுடைய வீட்டுக்கு போகக்கூடிய சூழ்நிலையில் இல்லை. எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. நாங்கள் போக முடியாது. எங்களை போக சொல்கிறார்கள். நாங்கள் போவதற்கு தயாராக இல்லை என்று சொல்லக்கூடிய சூழ்நிலையே அங்கு இருக்கிறது'' என்றார்.