வட மாநிலங்களில் கடுமையான மழை பொழிவு காரணமாக நாடு முழுவதும் வெங்காய விலை, கடும் விலையேற்றத்தை சந்தித்துள்ளது. இதனால் எகிப்தில் இருந்து இந்தியாவிற்கு வெங்காயம் இறக்குமதி, செய்யப்பட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் சில மாநிலங்களில், மாநில அரசுகள் மானிய விலையில், வெங்காயத்தை பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றன. கூட்ட நெரிசலில் மக்களும் சிக்கிக் கொண்டு வெங்காயத்தை வாங்கி வருகின்றனர்.
அவ்வகையில் வெங்காயத்தை மானிய விலையில் வாங்குவதற்காக வரிசையில் நின்ற முதியவர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ஆந்திர மாநிலம் குடிவடா பகுதியை அதிர வைத்துள்ளது. அரசு தரப்பில் இருந்து கிலோ 25 ரூபாய்க்கு கொடுக்கப்படும் மானிய வெங்காயத்தை வாங்குவதற்காக 3 கி.மீ நீளமுள்ள வரிசையில் 2 மணி நேரமாக காத்து நின்ற சம்பி ரெட்டி என்கிற முதியவர், மயக்கமுற்று சரிந்து விழுந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.