அரசு வசதிகளைக்கொண்டு நல்ல மருத்துவம் கொடுப்பது கடினம்தான்!: நிதின் கட்கரி
அரசு தரும் வசதிகளை வைத்துக்கொண்டு நவீன மற்றும் சிறந்த மருத்துவத்தை வழங்குவது கடினம் என மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மும்பையில் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசிய நிதின் கட்கரி, ‘கைதேர்ந்த மருத்துவர்கள், திறன்வாய்ந்த ஊழியர்கள், நிதிப்பற்றாக்குறை மற்றும் மோசமான சட்டம் ஒழுங்கு பின்பற்றுதல்கள் போன்ற பிரச்சனைகளை வைத்துக்கொண்டு, நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தரம்வாய்ந்த சிகிச்சைகள் தர இயலாது’ என்றார்.
மேலும் அவர், ‘இதற்கு சரியான தீர்வு அரசு நிலங்களை, சமூக நல நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் முனைவோர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் கட்டுவதற்கு வாடகையாக தரலாம். இதன் மூலம் அங்கு கட்டப்படும் மருத்துவமனைகளில் நடுத்தர மற்றும் ஏழை பொதுமக்களுக்கு தரம்வாய்ந்த உயர்தர சிகிச்சைகள் தர இயலும். இதன் ஒருபகுதியாக மும்பையில் உள்ள துறைமுக நிலத்தில் 17 ஏக்கரை ஒரு சமூக நல அமைப்பிற்கு வாடகையாக தரவுள்ளோம். அந்த நிலத்தில் அவர்களால் கட்டப்படும் நவீன மருத்துவமனையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்க வழிவகுக்கும்’ என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரியுடன் நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் பியூஸ் கோயல், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் டாட்டா அறக்கட்டளையின் சேர்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- ச.ப.மதிவாணன்