Published on 05/12/2020 | Edited on 05/12/2020
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள 'டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி, பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியில் தற்போது பத்தாவது நாளாகப் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து, விவசாயிகள் யமுனா அதிவேக நெடுஞ்சாலை வழியாக, டெல்லியை நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் பேரிகார்டுகள் வைத்துத் தடுத்தனர்.
அப்போது சில விவசாயிகள், பேரிகார்டுகளை வைத்து ஏற்படுத்தப்பட்ட தடுப்புகளை உடைத்து, டெல்லியை நோக்கிச் செல்ல முயன்றனர். இதனைத் தொடர்ந்து, போலீசார் தடுப்புகளைத் தாண்டி முன்னேற முயன்ற விவசாயிகளைக் கைது செய்தனர்.