புவி வெப்பமடைவதை தடுக்கவும், மழை வளம் பெறவும் மரங்கள் அதிகம் வளர்க்க தனியார் முத்தல் சமூக ஆர்வலர்கள் அரசு விழாக்கள் தொடங்கி அத்தனை விழாக்களிலும் மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர். மேலும் சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் விதைப் பந்துகளை தயாரித்து விதைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரங்கள் முதல் கிராமங்கள் வரை களிமண் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதால் இந்த ஆண்டு முதல் விநாயகர் சிலைகளில் மரக்கன்று விதைகளை இணைத்து செய்தால் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும் போது கரை ஒதுங்கும் விதைகள் முளைத்து மரங்கள் வளரும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் விதைப் பிள்ளையார்களை உருவாக்குங்கள் என்று கடந்த ஆகஸ்ட் 31 ந் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் தான் தமிழகத்தின் பல இடங்களிலும் விதைப் பிள்ளையார் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், செரியலூர், நெடுவாசல், மழையூர், அறந்தாங்கி பாலைவனம், பொன்னமராவதி மற்றும் பல கிராமங்களில் வினாயகர் சதுர்த்தி விழாவிற்காக, களிமண் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 13-ம் தேதி புதன் கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விற்பனைக்காக, முற்றிலும் களிமண்ணால் வினாயகர் சிலை 1 அடி முதல் 10 அடி உயரம் வரை தயாரிக்கப்படுகின்றன. இதில், ஒரு அடி விநாயகர் சிலை ரூ1000 முதல் 10 அடி சிலை 10000 வரை விற்கப்படுகின்றன.
பல வண்ணங்களில் ரசாயனம் கலவை மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை குளம் மற்றும் கடலில் கரைப்பதால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் பல நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகின்றன. இதற்கு தடை விதிக்கவிட்டாலும், களிமண்ணால் தயாரிக்கும் வினாயகர் சிலைகளில் மரக்கன்று விதைகளை வைத்த, விதை வினாயகர் சிலை தற்போது, பொதுமக்களிடம் நல்ல வரவேற்புகள் உள்ளன.
ஆலங்குடி அருகில் உள்ள மழையூர் பகுதியில் வினாயகர் சிலைகள் களிமண்ணால், சுற்றுசூழல் பாதிக்காத வகையில், பல்வேறு மரக்கன்று விதைகளை வைத்து விதை வினாயகர் சிலை தயாரிக்கபடுவதால் இதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். விதை வினாயகர் சிலையை நீர் நிலைகளில் கரைக்கும் போது அதிலிருக்கும் விதைகள் முளைத்து மரம், செடிகள் போன்று வளர்வதால் இயற்கையையும், சுற்றுசூழலையும் பாதுகாக்க புதிய முயற்சியில் தயாரிக்கப்படுகின்றன.
இது பற்றி வினாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபடும் மழையூர் மண்பாண்ட கலைஞர் புஷ்பராஜ்,
புதுகை மாவட்டம், மழையூர் பகுதியில் தயாரிக்கப்படும் வினாயகர் சிலைகள் சுற்றுசூழலை பாதிக்காத வகையில், பல்வேறு மரக்கன்று விதைகளை மண்ணுடன் கலந்து, மிக கலை நயத்துடன் தயாரித்து, குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம். தற்போது, போதிய அளவு களிமண் கிடைக்கததால், அதிக அளவில் விநாயகர் சிலைகள் தயாரிக்க முடியவில்லை, வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தற்போது, சிலைகள் செய்து கொடுக்கிறோம். இந்த ஆண்டு விதைப் பிள்ளையார்ளை பக்தர்கள் விரும்பி கேட்கிறார்கள். அதனால் பல்வேறு மரக்கன்று விதைகளை களிமண்ணுடன் சேர்த்து சிலைகள் செய்கிறோம்.
இயற்கையை காக்கவும், மழை பெய்யவும், மரங்களை வளர்க்கவும் அரசாங்கங்கள் எவ்வளவோ விழிப்புணர்வுடன் நிதியும் செலவு செய்கிறது. ஆனால் இது பொன்ற சிலைகளின் மூலம் தான் விதைகள் வேகமாக சென்றடையும். விநாயகர் சதுர்த்தியை பக்தியுடன் கொண்டாட விதை வினாயகர் சிலைகள் கலை நயத்துடன் தயாரிக்கும் தொழிலுக்கு, மத்திய, மாநில அரசுகள் போதிய களிமண் எடுக்க அனுமதியும் மானியமும் அளித்தால், அதிகமாக அனைத்து வகையான சிலைகள் செய்து கொடுப்போம். இதனால், பாரம்பரியமான கலைகளை, அழிவில் இருந்து காப்பாற்றப்படலாம். வறட்சியான பூமியை காக்க இந்த ஆண்டு முதல் புதிய வடிவில் விதைவினாயகர் சிலைகளை உருவாக்குவது எங்களுக்கும் மன நிறைவாக உள்ளது என்றார்.