ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதற்கிடையே பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரித்துள்ளன. ரஷ்யாவும் தலிபான்களை அங்கீகரிக்கும் என கருதப்படுகிறது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பாக பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளனர். சுமார் 45 நிமிடங்கள் இந்த ஆலோசனை நீடித்துள்ளது.
இந்த ஆலோசனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக எனது நண்பர் புதினுடன், விரிவான மட்டும் பயனுள்ள கருத்து பரிமாற்றத்தை மேற்கொண்டேன். கரோனாவிற்கு எதிரான இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பு உட்பட இரு தரப்பு விஷயங்களையும் நாங்கள் விவாதித்தோம். முக்கியமான விஷயங்களில் நெருக்கமான ஆலோசனையை மேற்கொள்ள நாங்கள் ஒப்புக்கொண்டோம்" என கூறியுள்ளார்.