இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற கரோனா பரிசோதனையில், 875 நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் மத்திய அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை எம்.பிகளுக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியள்ளது. இதனால் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தீவிரமான கரோனா கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற கூட்டத்தொடரை இரண்டு ஷிப்ட்டுகளாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி மாநிலங்களவை காலை 9 மணியிலிருந்து 2 மணி வரையிலோ அல்லது 10 மணியிலிருந்து 3 மணி வரையிலோ கூடும் எனவும், மக்களவை மாலை 4 மணி முதல் 9 மணி வரை கூடும் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை காலையிலும், மக்களவை மாலையிலும் கூடியது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 11 ஆம் தேதிவரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், கரோனா காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்படலாம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.