இந்திய உளவுத்துறைக்கு வந்த தகவலின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்திய கடலோர காவல்படை மற்றும் மத்திய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில், பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் பரப்பு வழியே இலங்கைகக்கு கொண்டுசெல்லப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கியது.
இந்திய உளவுப் பிரிவுக்கு வந்த தகவல், மத்திய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, சந்தேகத்தின் பேரில் இந்திய கடல் பரப்பு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. அப்போது இலங்கையைச் சேர்ந்த 'அகர்ஷா' என்ற மீன்பிடி படகு கேரள கடற்கரை பகுதியான விழிஞ்ஜம் பகுதி அருகே சந்தேகிக்கும்படி சென்று கொண்டிருந்தது. அதை இந்திய கடலோர காவல் படை உதவியோடு, ஹெலிகாப்டர் மற்றும் கோஸ்டல் கார்டு படகின் மூலம் சுற்றிவளைத்தனர்.
அந்தப் படகை மத்திய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு அதிகாரிகள் சோதனையிட்டதில், அதில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ 'ஹேஷசீஸ்' மற்றும் 150 கிலோ 'மெத்தாம் பெடாமைன்' என்னும் இருவகையான பொதைப் பொருட்களைக் கைப்பற்றினர். படகில் இருந்த இலங்கையைச் சேர்ந்த குரிரா, ஃபிர்னாண்டோ, திஷாபியா, ஜெயதிஷா, சதுரவன், அருண்குமார் என்ற ஆறு மீனவர்களையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர். அதில், மேற்கண்ட போதைப் பொருள்கள் பாகிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்டது என்று விசாரணையில் தெரிவித்தனர்.