இந்தியாவில் மீண்டும் கரோனா 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இரண்டாம் அலை உச்சத்தின்போது இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.3 லட்சத்தைக் கடந்திருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. கடந்த 10 நாட்களாக தினசரி 30 முதல் 34 ஆயிரம் வரையில் தொற்று பதிவாகிவந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இந்த எண்ணிக்கை 28 ஆயிரம், 30 ஆயிரம் என்ற அளவில் இருந்துவந்தது.
இதற்கிடையே, நேற்று (26.09.2021) மீண்டும் 26 ஆயிரம் என்ற அளவில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை - 30,118, நேற்று முன்தினம் - 28,914 என பதிவான தொற்று, நேற்று - 26,041 என்ற அளவில் பதிவாகியுள்ளது. மேலும், ஒரேநாளில் 29,621 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 3.29 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 3.36 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று காரணமாக 276 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக இதுவரை 4.47 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 38.18 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 86.01 கோடியாக உயர்ந்துள்ளது.