இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடுப்பூசிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, கரோனா தடுப்பூசி செலுத்துவதை கோ-வின் (coWIN) என்ற செயலி மூலம் ஒருங்கிணைப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கோ-வின் என்ற பெயரில் சில செயலிகள், ஆப் ஸ்டோர்களில் வலம் வரத் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை, இதுதொடர்பாக எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "விரைவில் வரவிருக்கும் அரசாங்கத்தின் செயலியான கோ-வின் போலவே, அதேபெயரில், சில நேர்மையற்ற சக்திகளால் உருவாக்கப்பட்ட செயலிகள், ஆப் ஸ்டோர்களில் உள்ளன. அதை பதிவிறக்கம் செய்யவோ, அதில் தனிப்பட்ட விவரங்களை பகிரவோ வேண்டாம். சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வத் தளம் பயன்பாட்டிற்கு வருகையில், அது போதுமான அளவு விளம்பரப்படுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.