கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் சீனாவின் பிற பகுதிகளிலும் கரோனா வைரஸ் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் சீனாவில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

இந்நிலையில் ஹூபே மாகாணத்தில் செவ்வாய் கிழமை மட்டும் 136 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளனர் என்று சீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது . இதன்மூலம் சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 2004 ஆக உயர்ந்துள்ளது.
தினசரி பலரும் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 74,185 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 11,977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 14,376 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வைரஸ் தாக்குதல் அதிகம் உள்ள வுகான் நகருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் நிமித்தமாக இந்தியர்கள் பலர் சென்றிருந்தனர். முதல்கட்ட 324 இந்தியர்களை ஏர் இந்தியா விமானத்தை அனுப்பி மீட்டனர். அதனை தொடர்ந்து மேலும் ஒரு விமானத்தை அனுப்பி 300க்கும் மேற்பட்டோரை இந்தியாவுக்கு அழைத்து வந்தனர்.
இங்கு வந்தவர்களை டெல்லியில் சிறப்பு மருத்துவமனையில் தங்க வைத்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வைரஸ் தொற்று இல்லை என்பதை அறிந்துகொண்டு, 14 நாட்களுக்கு பிறகு முகாமிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது வுகான் நகரில் 80க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களையும் மீட்டு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சீனாவுக்கு மருந்துபொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் மிகப்பெரிய ராணுவ விமானமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் வுகான் நகருக்கு நாளை செல்கிறது. இந்த விமானத்தை பயன்படுத்திய வுகானில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்கள் நாடு திரும்பலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.