கரோனா தடுப்பு, பொருளாதார சரிவு, சீனா உடனான எல்லைப்பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. அந்தவகையில் லட்சுமிவிலாஸ் வங்கி நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதைச் சுட்டிக்காட்டி மத்திய அரசை தற்போது விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
லட்சுமிவிலாஸ் வங்கியில் வாராக்கடன் அளவு அதிகரித்ததாலும், நிதிப்பற்றாக்குறை காரணமாக மற்ற நிதி நிறுவனங்களுடன் வங்கியை இணைக்கும் அதன் திட்டம் தோல்வியடைந்ததாலும், வங்கியின் நிதிநிலையை சீர்செய்யும் பொருட்டு அவ்வங்கியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது ரிசர்வ் வங்கி. மேலும், டிசம்பர் 16 -ஆம் தேதி வரை லட்சுமிவிலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள், தனிநபர்கள் வங்கிக் கணக்கிலிருந்து 25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்றும், மருத்துவச் செலவு, திருமணம் முதலியவற்றுக்காக கூடுதல் பணம் தேவைப்பட்டால், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை இந்த அளவுக்கு உச்சத்தில் இருந்ததில்லை. பணவீக்கமும் இதுபோன்று கட்டுக்கு அடங்காமல் இருந்தது இல்லை. நாட்டு மக்களின் நம்பிக்கை அன்றாடம் சிதைந்து கொண்டிருக்கிறது. சமூக நீதி நசுக்கப்படுகிறது. வங்கிகள் பிரச்சனையில் சிக்கியுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது. வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்ன நடக்கிறது என்று தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.