உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பணிக்காலம் இன்றுடம் நிறைவு பெற்றதால், நீதிமன்ற வளாகத்திலேயே அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்கவிருக்கும் எஸ்.எ.பாப்டே ரஞ்சன் கோகாயை வழி அனுப்பி வைத்தார். நீதிபதிகள் உடன் இருந்தனர்.
உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். 16,17 ஆகிய தினங்கள் விடுமுறை தினங்கள் என்பதால் அவருக்கு இன்று 15.11.2019 வெள்ளிக் கிழமை தினம்தான் கடைசி பணி நாள் ஆகும். அதை முன்னிட்டு இன்று அவர் விடைபெற்றுக்கொண்டார்.
அசாம் மாநிலத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள திப்ருகர் நகரில் 18.11.1954ல் பிறந்தார் ரஞ்சன் கோகாய். இவரின் தந்தை கேசவ் சந்திரகோகாய், 1982ல் அசாம் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர். தனது தந்தையைப்போலவே சட்டம் பயின்ற ரஞ்சன் கோகாய், 1978 முதல் குவஹாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். 2001ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2010ல் பஞ்சாம் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 2011ல் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2018ம் ஆண்டில் ஏப்ரல் 23ம் தேதி அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் அக்டோபர் 3ம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
தனது பதவிக்காலத்தில் முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார் ரஞ்சன் கோகாய். கடந்த 9.11.2019ல் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, அயோத்தி பிரச்சனைக்கு தீர்ப்பினை வழங்கியது பரபரப்பாக பேசப்பட்டது. 70 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நில வழக்கு முடிவுக்கு வந்ததால், ரஞ்சன் கோகாய் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அதே போல், ரஃபேல் விமான ஒப்பந்த வழக்கிலும், சபரிமலை கோயிலில் அனைத்து வயதுப்பெண்களும் வழிபட உரிமை கோரிய வழக்கிலும் ரஞ்சன் கோகாய் தீர்ப்பளித்துள்ளார்.