லடாக் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்களை விரட்டியடிக்க சீன மைக்ரோவேவ் ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக இங்கிலாந்து பத்திரிகையில் வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்ற செய்தி என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவவீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில், மனித தோலின் அடிப்பகுதியில் இருக்கும் நீர்த் துகள்களைச் சூடாக்கி, கடுமையான உஷ்ணத்தால் மனிதர்களை விரட்டும் வகையிலான மைக்ரோவேவ் ஆயுதங்களைச் சீனா பயன்படுத்துவதாகவும், இதன்மூலம் லடாக் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்களை விரட்ட சீனா திட்டமிட்டதாகவும் இங்கிலாந்து பத்திரிகையில் செய்திகள் வெளியாகின. இந்த சூழலில், இதுகுறித்து இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் அந்த விளக்கத்தில், "லடாக்கில் ‘மைக்ரோவேவ்’ ஆயுதங்களை சீன ராணுவம் பயன்படுத்தி வருவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது அடிப்படை ஆதாரமற்ற செய்தியாகும். இதில் சிறிதளவும் உண்மை இல்லை’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.