தனி மனித தகவல்கள் குறித்து காங்கிரஸ் சார்பில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 65 கோடி ரூபாய் விலைக்கு 87 தனியார் நிறுவனங்களிடம் பொதுமக்களின் ஓட்டுநர் உரிமம் குறித்த தகவல்களை மத்திய அரசு விற்றுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்திய ஓட்டுநர் உரிமங்கள் குறித்த தகவல்களை 65 கோடி ரூபாய்க்கு 87 தனியார் நிறுவனங்களிடம் விற்றுள்ளோம். இந்தியாவின் அத்தனை வாகன விவரங்களும் உள்ள டேட்டாபேஸ் (வாஹன்), மற்றும் ஓட்டுநர்கள் விவரங்கள் அடங்கிய டேட்டாபேஸ் (சாரதி) ஆகியவை மத்திய அரசின் முக்கிய டேட்டாபேஸ் ஆகும். இவை இரண்டிலும் 25 கோடிக்கும் அதிகமான வாகனப் பதிவு விவரங்கள், சுமார் 15 கோடி வாகன ஓட்டுநர்கள் விவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் தற்போது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் ’தகவல்கள் பரிமாறும் திட்டம்' மூலமாக மேலும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தகவல்கள் விற்கப்பட உள்ளன" என தெரிவித்தார். இவை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனிப்பட்ட நபர்களின் விபரங்களை அரசு எவ்வாறு தனியார் நிறுவனத்திடம் தரலாம் என பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.