நாட்டில் நிலவும் பொருளாதார நிலை காரணமாக, ஆட்டோமொபைல் சார்ந்த துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வரலாறு காணாத அளவுக்கு 5% சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூன்றாவது முறையாக நேற்று செய்தியளர்களை சந்தித்தார். அப்போது ஏற்றுமதிப் பொருட்கள் மீதான வரிச் சலுகைகள் என்ற புதிய திட்டத்தையும் அறிவித்தார்.
அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை விட்டுக்கொடுக்கும் வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அனைத்து வரிச்சலுகை திட்டங்களையும் விட ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதலாக ஊக்கமளிக்கும் வகையில் இந்த புதிய திட்டத்தால் பயன் கிடைக்கும் என அவர் கூறினார்.இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும் தொழில் துறையினருக்கு வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்காக செப்டம்பர் 19- ஆம் தேதி டெல்லியில் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே அடுத்த ஆண்டு மார்ச் மாதம், நாட்டின் 4 நகரங்களில் மாபெரும் ஷாப்பிங் திருவிழா நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். நகைகள் மற்றும் ஆபரணக் கற்கள், கைவினைப்பொருட்கள், யோகா, சுற்றுலா, ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் தொடர்பாக இந்த மாபெரும் ஷாப்பிங் திருவிழாக்கள் நடத்தப்பட இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார். ஏற்கனவே இருமுறை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பு, வட்டி குறைப்பு, வரி சலுகைகள் உள்ளிட்டவற்றை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.