Skip to main content

எந்த சவாலையும் சந்திக்க இந்தியாவுக்கு வலிமை உண்டு: அருண் ஜெட்லி

Published on 10/08/2017 | Edited on 10/08/2017
எந்த சவாலையும் சந்திக்க இந்தியாவுக்கு வலிமை உண்டு:
அருண் ஜெட்லி

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சீனா, அங்கு போர் தொடுக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதனால் சிக்கிம் எல்லையில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.

அண்டை நாடுகள் அளிக்கும் எவ்வித சவாலையும் சந்திக்க போதுமான வலிமை இந்திய படைகளுக்கு இருப்பதாக ராணுவ மந்திரி அருண் ஜெட்லி மீண்டும் உறுதிபட தெரிவித்தார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கப்பட்டதன் 75-வது நினைவு தினத்தையொட்டி டெல்லி மேல்-சபையில் நேற்று நடந்த சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அவர் கூறியதாவது:-

சமீபத்திய ஆண்டுகளில் நாடு ஏராளமான சவால்களை சந்தித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சவால் மூலமும் நாடு மிகவும் வலிமையானதாக மாறி வருவதை நம்மால் பெருமையாக கூற முடியும். கடந்த 1962-ம் ஆண்டில் சீனாவுடன் ஏற்பட்ட போர் மூலம் இந்தியா ஏராளமான பாடம் படித்துள்ளது. ஆயுதப்படைகள் முழு பலத்துடன் இருக்க வேண்டும் என்பதே அது. ஏனெனில் தற்போது கூட நமது அண்டை நாடுகளால் பல்வேறு சவால்களை நாடு எதிர்கொண்டு வருகிறது.

நமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை சிலர் குறிவைத்துள்ளனர். ஆனால் மேற்கு எல்லையோ அல்லது கிழக்கு எல்லையோ, எந்த பகுதியில் இருந்தும் வரும் சவால்களை எதிர்கொண்டு நாட்டை பாதுகாக்க நமது தீரமிக்க வீரர்களுக்கு போதுமான வலிமை உண்டு என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். நாட்டின் பாதுகாப்புக்காக எவ்வித தியாகத்தையும் மேற்கொள்ள நமது ஆயுதப்படைகளால் முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்