இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை தீவிரமாகவுள்ள நிலையில், அண்மையில் நில எல்லை சட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டம் அடுத்த வருடம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இச்சட்டம், சீனாவில் பொது ஒழுங்கைப் பராமரிக்கும் மக்கள் ஆயுதக் காவல் படை மற்றும் பொதுப் பாதுகாப்புப் பணியகம் ஆகியவற்றை சீன இராணுவத்துடன் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட வழிவகை செய்கிறது.
மேலும், எல்லையைத் தாண்டுபவர்கள் வன்முறையில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக ஆயுதத்தைப் பயன்படுத்தவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. அதுமட்டுமின்றி பாதுகாப்பு, கண்காணிப்பு, போக்குவரத்து ஆகியவற்றுக்காக சீனா தனது எல்லையில் உள்கட்டமைப்புகளை உருவாக்கலாம் எனக் கூறும் சட்டம், எல்லைப் பகுதிக்கு அருகே சீனாவின் அனுமதியின்றி எந்தவொரு தனி நபரோ, அமைப்போ நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும் வகையிலான கட்டமைப்புகளை மேற்கொள்ளக் கூடாது என கூறுகிறது. இதனைத்தவிர தனது எல்லைக்கு அருகே ட்ரோன்கள், மாதிரி விமானங்களை அனுமதியின்றி பறக்கவும் அந்த சட்டம் தடை செய்கிறது.
ஏற்கனவே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை பிரச்சனை நிலவும் நிலையில், இந்த புதிய சட்டத்தால் இருநாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனை தீவிரமாகலாம் என கருதப்படுகிறது.
இந்தநிலையில், சீனாவின் புதிய சட்டம் தொடர்பாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, எல்லை மேலாண்மை மற்றும் எல்லைப் பிரச்சனை ஆகியவற்றில், தற்போது அமலில் உள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டத்தைக் கொண்டுவரும் சீனாவின் ஒருதலைப்பட்சமான முடிவு கவலை அளிக்கிறது.
இத்தகைய நடவடிக்கையானது, எல்லைப் பிரச்சனையில் இருதரப்பும் செய்துகொண்ட ஒப்பந்தத்திலும் சரி, இந்திய - சீன எல்லையில் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதியை மீட்டெடுப்பதற்கு இருதரப்பும் செய்துகொண்ட ஒப்பந்தத்திலும் சரி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்தியா - சீனா எல்லைப் பகுதிகளில் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றக்கூடிய இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை இந்தியா தவிர்க்கும் என எதிர்பார்க்கிறோம். சீனாவின் இந்த புதிய சட்டம், 1963ஆம் ஆண்டின் சீனா - பாகிஸ்தான் 'எல்லை ஒப்பந்தம்' என்றழைக்கப்படும், இந்திய அரசால் சட்டவிரோதமானது, செல்லாதது என தொடர்ந்து கூறப்பட்டுவரும் ஒப்பந்தத்திற்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் வழங்காது."
இவ்வாறு இந்திய வெளியுறவுத்துறையின் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.