18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று நேற்று (01-06-24) 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையில், 543 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை ஒவ்வொரு ஊடகங்களும் நேற்று (01-06-24) வெளியிட்டது. அதில் ரிபப்ளிக் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது, பா.ஜ.க கூட்டணி 359 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களிலும் மற்றும் பிற கட்சிகள் 30 இடங்களில் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா பொருத்தவரை இந்தியா நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது, பா.ஜ.க கூட்டணி 371 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 125 இடங்களிலும், பிற கட்சிகள் 47 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் பிமார்க் வெளியிட்டுள்ளதாவது, பா.ஜ.க 359 இடங்களிலும், காங்கிரஸ் 154 இடங்களிலும், பிற கட்சிகள் 30 இடங்களிலும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
இதே போன்று, சில முக்கிய செய்தி நிறுவனங்கள் பா.ஜ.க 300க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும், 295 இடங்களில் கண்டிப்பாக இந்தியா கூட்டணி கைப்பற்றும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி உள்ளிட்ட கட்சிகள் நிர்வாகிகள் சந்தித்தனர். அதன் பின்னர், அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய இந்தியா கூட்டணியினர் வலியுறுத்தினர். அதில் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், “2023 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் நடைபெற்ற தேர்தல்களில், பா.ஜ.க பெற்ற இடங்கள் எந்த கருத்துக்கணிப்பிலும் கொடுக்கப்படவில்லை. மேற்கு வங்கத்தில் சொன்ன எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெற்றதா? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை விட மக்கள் கருத்துக்கணிப்புதான் முக்கியம். எங்களின் கணிப்பின்படி 290-295 இடங்களில் வெற்றி பெறுகிறோம்.
முதலில் தபால் வாக்குகளை எண்ணுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது சட்ட விதியில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.இதைப் பல ஆண்டுகளாகத் தேர்தல் ஆணையம் புரிந்து கொண்டது. இந்த 2019 வழிகாட்டுதலின் இந்த சட்ட விதிக்கு குட்பை கொடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் எங்கள் புகார். இந்த 2019 நடைமுறையைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகு இ.வி.எம் வாக்குகளை எண்ண வேண்டும். யாருக்கு எத்தனை வாக்குகள் என்பதையும் உடனே தெரிவிக்க வேண்டும். தபால் வாக்குகளில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளை அறிவித்த பிறகே வாக்கு எந்திர முடிவுகளை அறிவிக்க வேண்டும். தேர்தல் ஆணைய அதிகாரிகளை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். 3 முக்கிய பிரச்சனைகள் குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.