ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இழந்த தனது எம்.பி பதவியை திரும்பப் பெறுவார் என்று சொல்லப்படுகிறது.
இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவருக்கு மீண்டும் எம்.பி பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய கார்கே, ''ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உத்தரவால் ஜனநாயகம் வென்றுள்ளது. உண்மை மட்டுமே வெல்லும் என்பது நிரூபணமாகியுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். அரசியலமைப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. இதனால் பாஜகவின் சதி முற்றிலும் அம்பலமாகியுள்ளது. நீதி உயிர்ப்புடன் இருப்பதற்கு இன்றைய தீர்ப்பு ஒரு சாட்சி. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி'' எனத் தெரிவித்தார்.
அதன் பிறகு பேசிய ராகுல் காந்தி, “நான் என்ன செய்ய வேண்டும்; எனது வேலை என்ன என்பது என் மனதில் தெளிவாக இருக்கிறது. எதுவாக இருப்பினும் உண்மை வெல்லும்” என சுருக்கமாக கருத்து தெரிவித்தார்.