புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் திருபுவனை தொகுதியில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அங்காளன். பாஜக கூட்டணி ஆதரவு எம்.எல்.ஏவான இவர் நேரடியாக பாஜகவிற்கு ஆதரவளித்து வருகிறார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அவரது தொகுதி புறக்கணிக்கப்படுவதாகவும், அரசு எந்தவித நலத்திட்ட உதவிகளையும், அரசு திட்டங்களையும் செயல்படுத்த விடுவதில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தொகுதிக்கு எந்தவித திட்டங்களையும் அனுமதிக்காத முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசின் நிதி உள்ளிட்டவற்றை பாஜக துணையோடு வாங்கும் முதலமைச்சர் பாஜக இங்கு வளரக்கூடாது என்ற நோக்கத்தில், பாஜகவிற்கு ஆதரவளித்து வரும் அனைவரையும் புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டி இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக அவரின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொகுதி மற்றும் சட்டமன்ற உறுப்பினரை புறக்கணித்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தெரிவித்தார்.
என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்கும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே முதலமைச்சரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.