
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சமீபத்திய கருத்து குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிமாநிலங்களிலிருந்து உத்தரப்பிரேதசம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களில் மகாராஷ்டிராவிலிருந்து திரும்பிய 75 சதவீத தொழிலாளர்களும் டில்லியிலிருந்து திரும்பிய 50 சதவீத தொழிலாளர்களும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் பத்திரிகையாளர் நடுவே தெரிவித்தார். மேலும் இது எங்களுக்கு ஒரு சவால். இதிலிருந்து மீள்வதை நோக்கிச் செயல்படுவோம் என அவர் அறிவித்தார்.
இதற்கு டிவிட்டரில் பதிலளித்த பிரியங்கா, “முதல்வர் எங்கிருந்து இந்த விவரங்களைப் பெற்றார். பொறுப்பின்றி இத்தகைய தரவுகளை அவர் எப்படி வெளியிடலாம். இந்த ஊரடங்கின்போது கிட்டத்தட்ட 23 லட்சம் தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசம் திரும்பியுள்ளனர். யோகியின் கணக்குப்படி பார்த்தால் உத்தரப்பிரதேசத்தில் குறைந்தபட்சம் 10 லட்சம் பேருக்காவது கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவேண்டும். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் கரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை இதுவரை 6,228 மட்டுமே.
டெல்லியும் மகாராஷ்டிராவும் பா.ஜ.க. ஆளாத மாநிலங்கள் என்பதற்காக, உண்மையை உறுதி செய்யாமல் பரபரப்பைக் கிளப்பும் தகவல்களைக் கூறக்கூடாது என்றார்.